தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கமும் நீதிமன்றங்களும் தயக்கம் காட்டி வருகின்றன எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான இவ்வறிக்கையில், இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள், கொலைகள், பாலியல் அத்துமீறல்கள், கண்மூடித்தனமான கைதுகள், தொந்தரவுகள், பொதுமக்களின் சொத்துக்களை மீளளிக்காமை, சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர் மீதான கண்காணிப்பு என்பன இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை இராணுவத்தினரால் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதும், அரசாங்கத்தின் பாகுபாடுகள் தொடர்கின்றன எனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்;தது.
இவ்வாறு பொதுமக்களை துன்புறுத்தும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆயுதப்போரின்போதும் அது முடிவுக்கு வந்த பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைமை தொடர்கின்றன எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நிலைமாற்று கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதில் இலங்கை அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றங்களையே எட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இராணுவம், துணை ஆயுதப்படைகள், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை இன்னமும் நீடிக்கிறது. ஆனால், இத்தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கமும், நீதிமன்றங்களும் தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்திருந்த காணிகளை இராணுவ மய நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே இடம்பெறுகின்றன எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.