ஈழ தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்காக தென்னிந்திய நடிகர் கருணாஸ் இன்று யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்தார்.

இதன்போது பல்கலைக்கழத்திற்காக அடிக்கல்லை நாட்ட வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.வந்த நடிகர் கருணாஸ் காலை 9.30 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து பேசினார்.
சுமார் 1மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் கருணாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழகத்தில் முகாம்களில் உள்ள ஈழ தமிழ் மாணவர்கள் மற்றய பல்கலைக்கழகங்களில் கல்விக்காக கையேந்தக் கூடாது என்பதற்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க உள்ளேன்.
அந்த பல்கலைக்கழக கட்டிடத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர், பொது நலவாதியான ஒருவர், என்ற அடிப்படையில் முதலமைச்சரை அடிக்கல் நாட்டுவதற்கு அழைத்துள்ளேன். அவர் வருவதாக கூறியுள்ளார். நான் தமிழகம் திரும்பிய பின்னர் முதலமைச்சரை தமிழகத்திற்கு அழைப்பதற்கான திகதியை அறிவிப்பேன்.
மேலும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழக மக்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டபோதும், தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியபோதும் மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அறிக்ககளை விடுத்தவர். அந்தவகையில் காவிரி நீர் பிரச்சினைக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்த பாரிய அறவழி போராட்டத்திற்கான அறைகூவலை முதலமைச்சர் விடுக்கவேண்டும் என கேட்டுள்ளேன்.
அவர் அதனை ஆழமாக பார்த்து வருகிறார் என்பதை நான் அறிந்து கொண்டேன் என்றார். தொடர்ந்து ஈழ தமிழ் மாணவர்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை யாழ்.மாவட்டத்திலும் நிறுவுவீர்களா? என கேட்டபோது அவ்வாறான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். அதற்காகவும் பாடு படுவேன் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்…
ஈழ தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்காக தொழிநுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு நடிகர் கருணாஸ் எடுத்திருக்கும் நடவடிக்கை சிறந்த நடவடிக்கை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
புதிய பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு முதலமைச்சரை கருணாஸ் அழைத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தகவல் தரும்போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் முகாம்களில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை காட்டினாலும் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதனாலேயே கருணாஸ் தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார். அவருடைய முயற்சி சிறந்த முயற்சியாகும். அதனாலேயே அவருடைய பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழகம் செல்வதற்கு நான் இணங்கியிருக்கிறேன்.
மேலும் தமிழக பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வை உண்டாக்கி இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வியை தமிழகத்தில் தொடரும் வாய்ப்பை பெற்று கொடுக்கும்படியும்,
விவசாயதுறை சம்மந்தமாகவும் விவசாய துறையில் நவீன வசதிகள் தொடர்பாகம் எமது மா ணவர்கள் தமிழகத்தில் கல்வியை தொடர்வதற்கு புலமைபரிசில் வசதியை பெற்றுக் கொடுக் கும்படியும், தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்கள் இங்கேவந்து முதலீடுகளை செய்வதற்கான வழிவகைகளை செய்யுமாறும் கேட்டிருக்கிறேன். அதன பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார் என்றார்.