Ad Widget

கோட்டாபய கொலைகளைச் செய்தார் என்பது உறுதி! – விரைவில் உண்மைகள் வெளிவரும்

குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்க பாரபட்சம் வழங்கவோ அல்லது காப்பாற்றவோ மாட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில், “மத்திய வங்கி ஊழலுடன் தொடர்புபட்ட அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதில் தாமதம் ஏற்படக் காரணம் என்ன? இந்த விடயத்தில் பிரதமருக்கு தொடர்பு உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த கேள்விக்கு ராஜித பதில் அளிக்கையில்,

“மத்திய வங்கியில் அர்ஜுன் மகேந்திரனை பதவியில் அமர்த்திய விடயத்துடன் பிரதமருக்கு தொடர்புள்ளது. அப்போது பிரதமருக்கு நாம் எச்சரிக்கை விடுத்தும் அவர் கேட்கவில்லை.

என்றாலும் பிற்காலத்தில் அவர் அதனை உணர்ந்து கொண்டார். அர்ஜுன் மகேந்திரன் தவறு செய்தவர் என்பதை பிரதமர் ஒப்புகொண்டார். அதன் காரணமாகவே பிரதமர் அவரை காப்பாற்ற முயலவில்லை.

அர்ஜுன் மகேந்திரனை ஏன் காப்பாற்றவில்லை என இப்போதும்கூட பிரதமரின் குடும்பத்தார் அவரிடம் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் பிரதமரின் குடும்பத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

தவறு செய்த எவரையும் பிரதமர் தண்டிக்காமல் விடமாட்டார். நானாக இருந்தாலும் தவறு செய்தால் எனக்காக முன்வரமாட்டார். வேறு தலைவர்கள் குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களை காப்பாற்ற முயற்சி செய்தாலும் பிரதமர் அவ்வாறு செய்வதில்லை. அதுவே அவருக்கு பிரச்சினையாகவும் உள்ளது” என பதில் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து “கோட்டாபய போன்றோர் மீது குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவரை ஏன் கைதுசெய்யவில்லை?” எனவும் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு ராஜித பதிலளிக்கையில், “நீங்கள் நினைப்பது போல அவசரமாக விசாரணைகளைச் செய்ய முடியாது. கோட்டாபய கொலைகளைச் செய்தார் என்பது உறுதியாகி விட்டது. என்றாலும் விரைவில் அவற்றை வெளிப்படுத்துவோம்.

சரத் பொன்சேகாவை விசாரித்தது போல எம்மை நடந்துகொள்ளுமாறு கூறுகின்றீர்களா? விசாரணைகளின் முடிவில் விரைவில் அனைத்தையும் வெளிப்படுத்துவோம்” என ராஜித காரசாரமாக பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts