மன்னார், ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் என, சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த கட்டடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வரும் மண் மன்னாரிலுள்ள மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதன்போது, மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடொன்றிற்கு விற்கப்பட்ட மண்ணில் சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் துண்டுகள் பல நேற்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.
எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் ஒரு டிப்பர் மண்ணை பணம் கொடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த மண் வீட்டிற்கு வெளியில் கொட்டப்பட்ட நிலையில் மண்ணை அள்ளி வீட்டு வளவினுள் கொண்டியுள்ளார்.
எனினும் மண்ணிலிருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் பல வர தொடங்கிய நிலையில், வீட்டின் உரிமையாளர் சந்தேகம் கொண்டு நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளனர். மேலும் வவுனியா தடவியல் நிபுணத்துவ பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) (26) காலை 10 மணியளவில் குறித்த பகுதிக்குச் செனறு விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த எலும்புத்துண்டுகள் மனிதனுடையதா? அல்லது மிருகங்களினுடையதா? என்பது தொடர்பில் விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நீதவான் மற்றும் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் வரை, சந்தேகத்திற்கிடமான எலும்புகள் மீட்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.