இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் தமிழ் மொழியை சீரழிக்கும் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவும் கலை நயம் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
அவர்கள் நவீன இலத்திரனியல் யுகத்தில் இலத்திரனியல் கருவிகளுடன் கூடிய நாட்டங்களை கொண்டிருக்கின்ற காரணத்தினால் இயற்கையின் எழில் கொஞ்சும் வனப்பையும் அதன் ஆரோக்கிய சூழ்நிலையையும் அறிய மாட்டாதவர்களாக வேறொரு செயற்கைப் பரிமாணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெறுகின்ற போதும் இயற்கையின் வனப்பும் இயற்கை எமக்குத் தரும் கொடைகளையும் இரசிக்கக் கூடிய வகையில் இளைய சமுதாயம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் மொழியைச் சீரழிக்கும் செயற்பாடுகள் கண்டிப்பிற்குரியன. இன்றைய தொடர்பாடல் சாதனங்கள் தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை உணர முடியாதவாறு மழுங்கடிக்கின்ற செயற்பாடுகளை போட்டி போட்டுக்கொண்டு செய்வது வேதனைக்குரியது.
இது ஒரு வேளை பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை எடுத்துக் காட்டுவதாக அமையலாம். ஆனால் இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கை தான். இதை எங்கள் இளைய சமுதாயம் உணர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.