ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமால் ஆக்கப்பட்டோரது உறவினர்களை சந்தித்ததாக வெளியான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்தி உண்மைக்கு புறம்பானது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியின் யாழ். வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்மை ஜனாதிபதி சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்து அழைத்து சென்றனர்.
ஏற்கனவே இந்துக்கல்லூரியின் தமிழ் விழா நிகழ்வின்போது ஏமாற்றப்பட்டது போன்று மீண்டும் ஏமாறுவதை தவிர்க்கும் வகையில் அங்கு நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுவதற்கு முன்னர் அவரை சந்திக்க வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்தோம்.
எமது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தனது உரையிலேயே விடயங்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்பி, இவ்விடயத்தை குறிப்பு மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பியும் எவ்வித பதிலும் கிட்டவில்லை.
பின்னர் விழா முடிந்து பாதுகாப்புப் பிரிவினர் புடைசூழ ஜனாதிபதி வரும்போது, அங்கு நின்ற அதிகாரிகளால் அழைக்கப்பட்டோம். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அருட்தந்தையாகிய என்னையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதியான தாயையும் தடுத்துத் தள்ளினர். இவ்வாறான இடையூறுக்கு மத்தியில் பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஜோசப்பின் புகைப்படம் ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டது.
இதனையே புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டு காணாமல் போனோரது உறவுகளுடன் சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனாதிபதிக்கும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட போராட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்துப் பரிமாறலுடனான சந்திப்பு நடைபெற்றதா என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரிடமும் அதிகாரிகளிடமும் கேட்க விரும்புகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரியின் தொழில்நுட்பக் கூட திறப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்திருந்த போதே இக்குழப்பம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.