வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக வட.மாகாண தொண்டராசிரியர்கள் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
நிரந்தர நியமனம் வழங்கத் தாமதமாவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே வட.மாகாணசபை முன்பாக தொண்டராசிரியர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடமாகாண முதலமைச்சர் அழைத்துச் சந்தித்ததுடன், இவ்விடயம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சிற்கு உடன் தெரியப்படுத்தி தாம் பதிலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
வடமாகாணத்திலுள்ள 680 தொண்டராசிரியர்களில் 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், எஞ்சிய அனைத்துத் தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க கோரி மேற்கொண்ட போராட்டங்களையடுத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலையீட்டால் குறித்த நியமனம் நிறுத்தப்பட்டிருந்தது.