வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம் நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –
எமது நாட்டில் இதுவரையில் தீர்ப்புகள் வழங்கப்படாத நிலையில் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிய வருகின்றது. அதே நேரம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு, வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான் இங்கு தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறுகின்றபோது, நீங்கள் ‘அப்படி எவரும் இல்லை’ எனக் கூறலாம். அது உங்களது அரசியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம். அதுவல்ல இங்கு பிரச்சினை. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சுமார் 130 பேர் வரையில் இன்னும் தடுப்பில் இருப்பதாகவே தெரிய வருகின்றது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் மாத்திரம் 78 தமிழ் அரசியல் கைதிகள் தடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவர்களில் வழக்குத் தொடரப் படாதவர்களுக்கு வழக்கு தொடர்வதற்கோ, தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிவுறுத்துவதற்கோ நீங்கள் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் என்ன? எனக் கேட்க விரும்புகின்றேன்.
இக் கைதிகளின் பிரச்சினைகளின் தீர்வினை விரைவுபடுத்தும் நோக்கில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு உறுதி காணப்பட்டிருந்த போதிலும், அந்த வழக்குகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒரு தடவை என்ற வகையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதுவும், முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்ற வகையில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாமலும், விசாரணைகளை ஒத்தி வைக்கும் செயற்பாடுகளே தொடர்வதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக வழக்குகள் தாக்கல் செய்யப்படாது, பல வருடங்கள் தடுப்பிலிருந்த அரசியல் கைதிகள், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டும், தண்டனைப் பெற்றவர்களைப் போன்று தொடர்ந்தும் நீண்ட காலம் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைவான சாதகமான ஏற்பாடுகள் தேவை
தமிழ் அரசியல் கைதிகளில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் கொழும்புக்கு வெளியிலுள்ள நீதி மன்றங்கள் பலவற்றிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளிலிருந்து வெகு தொலைவிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைத் தவணைகளுக்காக கொண்டு செல்லப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், சில தினங்கள் அந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட சிறைச்சாலைகளில் அல்லது மறியச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்றபோது, ஏனைய கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்புபட்ட கைதிகளுடன் ஒன்றாக தடுத்து வைக்கப்படுகின்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்கின்ற இடையூறுகள், கொடுமைகள் என்பன ஏராளம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய நிலைமைகளில் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கென தனியான ஏற்பாடுகள், பாதுகாப்பு என்பன இருந்தன என்றும், தற்போது அந்த நிலைமைகள் மாற்றப்பட்டு, ஏனைய குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புள்ள கைதிகளுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம், மாலைத்தீவு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மாலைத்தீவில் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள மூவர் கடந்த 3 வருடங்களாக வெலிக்கடைச் சிறையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.
எனவே, தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
இனவாதக் குரலுக்கு எடுபட்டுப் போனால் ‘திகன” பகுதியில் ஏற்பட்ட கதிக்கே முழு நாட்டுக்கும் ஏற்படும்
இனவாதக் குழுக்களின் குரலுக்கு எடுபட்டுப் போனதால் அண்மையில் அம்பாறை மற்றும் திகன போன்ற பகுதிகளில் ஏற்பட்ட கதிக்கே இந்த நாடு முழுமையாக ஆட்படக்கூடும் என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இனவாதத்தையும், மத வாதத்தையும் தூண்டுவோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென சுயாதீன ஆணைக்குழுக்களை இந்த அரசு அமைக்க முற்பட்ட காலத்திலேயே நாம் வலியுறுத்தியிருந்தோம்
படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும் –
படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கும், மக்கள்; தொகைக்கும் ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும் என்றும், படைகளிலும், பொலிஸ் துறையிலும் இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தோம்.
இத்தகைய சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர், அவர் செய்தார், இவர் செய்தார், நான் செய்யவில்லை, அவர் செய்யவில்லை என்றெல்லாம் கருத்து தெரிவித்துக் கொண்டு திரிவதில் எவ்விதமான பயனும் இல்லை. நாம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததைப் போன்று இந்த நாட்டில் ஏற்பாடுகள் இருந்திருப்பின் இன்று அம்பாறை சம்பவம், கண்டி, திகன சம்பவம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லாதிருந்திருக்கும் என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
வெறுப்புணர்வுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகளுக்கு எதிரான தடைச் சட்டமூலமொன்று கொண்டு வரப்படுவதாக இருந்தது. அது, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என அதற்கு எதிராக செயற்பட்டவர்கள், அவர்கள் கூறிய அந்தக் கருத்துச் சுதந்திரத்தால் அண்மையில் அம்பாறையிலும், திகனயிலும் இழக்கப்பட்ட மனித உயிர்களுக்கும், எரிந்து முடிந்த சொத்துக்களுக்கும் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் இலங்கையின் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையின் வெளிப்பாடு என அமெரிக்காவின் முன்னாள் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தைக் கையாண்ட தூதுவர் ஸ்ரீபன் ரப் கூறியிருக்கின்றார் என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.
சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும்
நாங்கள் இயற்றுகின்ற சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும். இந்த நாடு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகின்றது. எனவே பகைமைகள் மறுக்கப்பட வேண்டும். இனங்களிடையே சந்தேகங்கள் அகற்றப்பட்டு, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும். அதனை நோக்கிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை தகர்க்கின்ற செயற்பாடுகளுக்கு எதிரான சட்ட மூலங்கள் வகுக்கப்பட வேண்டும்.
சட்டங்கள் கடுமையாக்கப்படுவதில் இருந்துதான் இந்த நாடு, இந்த நாட்டு மக்களது நலன் கருதிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்கின்ற பாடங்கள் இந்த நாட்டில் செயற்பாட்டு ரீதியில் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை தொடர்பிலும் எமக்கு கேள்விகள் இல்லாமல் இல்லை.
அதாவது, சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டு, வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர்தான் அவர் சட்டத்தரணியின் உதவியை நாட முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.
பொலிஸாருக்கு முதலில் வழங்கும் வாக்குமூலமே அநேகமான வழக்குகளில் முக்கிய சாட்சியாக மாற்றம் பெறுகின்ற நிலைமைகள் இல்லாமல் இல்லை. இத்தகைய நிலையில், குற்றம் செய்யாதவர்கள்கூட குற்றவாளியாக்கப்படுகின்ற நிலைமைகள் உருவாகக் கூடும் என்பதால், இது தொடர்பில் மீள் பரிசீலனை அவசியமாகின்றது என்ற விடயத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அந்த வகையில், இந்த நாட்டில் இருக்கின்ற குழப்பங்களையே இன்னும் தீர்க்க முடியாதுள்ள நிலையில், மேலும், மேலும் குழப்பங்களை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்காமல், இந்த நாட்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து, இந்த நாட்டை சமூக, பொருளாதார மற்றும் ஆரோக்கியமான அரசியல் நோக்கி நகர்த்துகின்ற வகையிலான, எமது நாட்டுக்குப் பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, சிந்தித்து, செயற்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்