யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் வழங்கப்படும் நட்ட ஈடுகளை முன்னாள் போராளிகளும் பெற முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 23/2 நியதிக் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
”யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முறையான மருத்துவப் பதிவுகள் மற்றும் நோயாளிகளுக்கான அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படவில்லை. யுத்தகாலத்தில் பல்வேறுபட்ட மாவட்டங்களின் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்ற முன்னாள் போராளிகள் தற்போது குறித்த மருத்துவமனைகளில் மருத்துவச் சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது.
முன்னாள் போராளிகள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நட்டஈடுகள் கிடைத்தால் அது இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக அமையும்.
எனவே இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களிடம் இக்கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.
அத்துடன், மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் எமது மண்ணில் தொடரக் கூடாது.
இந்நிலையில், தங்களது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, முடிவுகள் ஏதேனும் வருமா? அல்லது நீதிமன்ற விசாரணைகள் இன்றிய நிலையில் எதுவுமே அறியக் கிடைக்காமல், வாழ் நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க நேரிடுமா? என்ற திக்கற்ற நிலையில் இந்த தமிழ் அரசியல் கைதிகள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் ” என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.