தமது கோரிக்கைகளுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 21 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் சகல பல்கலைக்கழகங்களினதும் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்நிலையில், இவர்களுக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி அமைச்சு நேற்று குறிப்பிட்டிருந்தது. உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற்றுக்கொடுப்பதாக உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
அதன் பிரகாரம் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தையொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இதுவரை இடம்பெற்ற சகல பேச்சுவார்த்தைகளிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வை பெற்றுக்கொடுக்க தவறியதாகவும், இன்றைய தினம் தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் பல்கலைக்கழகத்தின் சகல நடவடிக்கைகளையும் முடக்கி போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.