இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்த வழி கூறும் வடமாகாண முதலமைச்சர்!

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் தத்தமது அடையாளங்களுடன் சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க வேண்டுமாயின் இணைப்பு மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இணைப்பு மொழி கட்டாயமாக்கப்படுவதன் மூலம் வெவ்வேறு மொழி பேசும் இனத்தவர்களிடையிலான புரிந்துணர்வு மேம்பட வழிவகுக்கும். எனவே, இதனை நடைமுறைப்படுத்த அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும், அறிஞர்களும் இணைந்து இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.

தாய்மொழிக் கற்கை முறைமை சிறப்பானதே. ஆனால் இடைத்தர நிலைகளிலிருந்து உயர் நிலைக்கல்விக் கூடங்களுக்கு மாணவ மாணவியர் செல்கின்ற போது ஆங்கிலக் கல்வியின் அத்தியாவசியம் உணரப்படுகின்றது. இன்றும் கூட கல்வி அறிவுகளில் மிகவும் மேம்பட்ட பலர் ஆங்கில மொழித் தேர்ச்சி சிறப்பாக இல்லாமையால் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதில் சிரமமடைவதை நான் காணும் போது மிகுந்த மன வேதனை அடைகின்றேன்” எனத் தெரிவித்தார்.

Related Posts