இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தில் இறந்தவர்களையும் விட அதிகமானவர்கள் தற்போது வீதி விபத்துகளில் இறக்கின்றார்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) யாழில் இடம்பெற்ற போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் வீதி விபத்துகள் சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யுத்தகாலத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்காக பயங்கரவாதிகளையும், இராணுவத்தினரையும் மக்கள் திட்டிக்கொண்டு வந்தார்கள் ஆனால் இப்போது அதற்கும் அதிகமான மக்கள் விபத்துகளினால் இறந்து போகின்றார்கள்.
இப்போது யாரைத்திட்டுவது? இதற்கு காரணம் மக்களே அதிவேக பயணம், விவேகமற்ற வகையில் வண்டியைச் செலுத்துவது போன்ற காரணங்களினாலேயே விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.
எனவே வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானமும் கவனமும் தேவை. அப்பாவி மக்கள் விபத்துகளினால் இறப்பதை தடுக்க அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் ரெஜினால்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.