தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் ஜனநாயக சூழ்நிலை விருத்தியடைந்திருப்பதில் சந்தேகம் இல்லை. வளமிக்க பெருமளவான தனியார் காணிகள் படையினர் வசம் இருக்கின்றன. யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகளின் பின்னரும் மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படாதிருக்கின்றன.
மீனவர்களது பிரச்சினைகள், காணாமல் போனோர் விடயம், அரசியல் கைதிகளின் விடயம் என பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளன. அத்துடன் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.
வடக்கு மாகாண சபை தமது பொறுப்புகளை நிறைவேற்றி இருக்கின்ற போதும், வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் மீள அனுப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் பயங்கரவாத தடை சட்டம் இன்னும் மாற்றி அமைக்கப்படாதுள்ளது. அரசாங்கம் வாக்குறுதி அளித்தமைக்கமைய குறித்த சட்டத்தை ரத்து செய்வது அவசியமாகும்” எனக் கூறினார்.