தைத்திருநாளினைக் கொண்டாடும் மக்களுக்கு நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்தி சமத்துவமாக வாழ்வதற்கு இந்த தைத் திருநாளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைத்து மக்களும் புரிந்துணர்வுடன் வாழ்வதற்கான நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன், மக்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான ஓர் தொடர்பினை ஏற்படுத்தும் ஓர் நிகழ்வே தைப் பொங்கல் ஆகும். எனவே அந்நாளில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு இறைவனின் அருள் கிடைக்க வாழ்த்துகின்றேன்” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.