வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது : விக்னேஸ்வரன்

வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்குசமச்சீரில்லாததனி அலகு உருவாக்கப்படுவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகும் என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராவாராம் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவரிடம், வடக்கு,கிழக்கை இணைக்க முனைப்புடன் செயற்படுவதன் காரணம் என்ன என வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர், வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ்ப் பேசும் மக்களை பாதிக்கும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைப்பு,சுயாட்சி,சமஷ்டி போன்ற கருத்துக்கள் வெறும் கருத்துக்கள் அன்று மாறாக அவை எமது பாதுகாப்புக்கான கேடயங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அவற்றை கைவிட்டால் எம்மை அடிபணியவைப்பதும் அடியற்றுப் போகவைப்பதும் இலகுவாகி விடும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆயுதங்கள் மௌனித்ததும் தனிநாட்டுக்கான கோரிக்கையும் அதனுடன் மௌனித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம் தனி அலகொன்றை உறுதிசெய்த பின் வடகிழக்கு இணைப்பு பற்றிய கருத்தறியும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே சிலருக்கு எரிச்சலை மூட்டுகின்றதோ இல்லையோ எமது பாதுகாப்புக்கும் நாம் தொடர்ந்து இங்கு வாழ்வதற்கும் ஏற்புடைத்தான ஒரு மார்க்கத்தை நாம் வலியுறுத்துவது எந்தவிதத்திலும் பிழையாகாது என தெரிவித்துள்ள அவர், வடகிழக்கு இணைப்பில்லா இனப்பிரச்சினைத் தீர்வொன்றை நாம் நாடினால் எமது இனம் அழிய அது அடிகோலும் என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார்.

Related Posts