Ad Widget

டக்ளஸ் கொலை முயற்சி : 6 பேருக்கு சிறை! 9 பேர் விடுதலை!!!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 06 பேருக்கு 10 1/2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, களுத்துறை சிறைக்கு விஜயம் செய்திருந்த வேளையில், கூரிய மற்றும் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முற்பட்டமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகள் தொடர்பில், சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கமைய, 06 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றினால் நேற்று (30) இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் களுத்துறை சிறையிலிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களால் குறித்த கொலை முயற்சி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் 16 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வடக்கு – கிழக்கு மாகாண நிதி பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட அன்டன் எமில் லக்ஷ்மி காந்தன் உள்ளிட்ட 09 பேர் நிரபராதிகள் என இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எமில் காந்தன் உள்ளிட்ட பிரதிவாதிகளில் பெரும்பாலானோர் இன்றிய நிலையில் குற்றவியல் சட்டத்தின் 241 ஆவது பிரிவிற்கு அமைய, குறித்த வழக்கை நடாத்துதுவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு, நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்ததோடு, குற்றத்தை ஒப்புக்கொள்ளாத பொன்னுசாமி ஶ்ரீ ஸ்கந்தராஜா எனும் 14 ஆவது பிரதிவாதிக்கு எதிராக வழக்கு விசாரணையை நடாத்துவதற்கு நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

நேற்றையதினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்த பிரதிவாதியான ஶ்ரீ ஸ்கந்தராஜாவிடம் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. ஆயினும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் நிரபராதி என நீதிமன்றத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

ஆயினும் இவ்வழக்கு விசாரணைகளின் இறுதி வரை நீதிமன்றிற்கு ஆஜரான ஒரேயொரு பிரதிவாதி ஶ்ரீ ஸ்கந்தராஜா என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத ஏனைய குற்றவாளிகளை கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டது.

Related Posts