Ad Widget

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு த.தே.கூ. முழுமனதுடன் பங்காற்றியுள்ளது : சம்பந்தன்

சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘அதிகாரப்பகிர்வின் தேவை குறித்து 1957 ஆண்ட முதல் பேசப்பட்டுவருகிறது. கடந்த 30 வருடகாலமாக இது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருதை இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியதுடன் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவே முதல்முறையாக அதிகாரப்பகீர்வு அரசியல்யாப்பு ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதையும் அதனைத்தொடர்ந்தே பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண்பது குறித்து பேசி வருவதையும் குறிப்பிட்டார்.

கடந்தகால வன்முறைகளினால் 50 வீதமான இலங்கைத் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியதுடன் , தேசிய பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காணத் தவறும் பட்சத்தில் மேலும் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் புதிய அரசமைப்பில் பிரிவினையைத் தடுக்கும் உறுதிப்பாடு கொடுக்கபட்டுள்ளமையால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதனை நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற தங்களது இறையாண்மையின் அடிப்படையில் அவர்களது சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களைப் பயன்படுத்தக்கூடியவாறான ஓர் அதிகாரப் பகிர்வு ஒழுங்கையே நாம் வலியுறுத்துகிறோம். இத்தகைய அதிகாரங்கள் எவ்வகையிலும் மீளப் பெறப்படலாகாது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வலியுறுத்தினார்.

இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் என்று இதன்போது உறுதி தெரிவித்த பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட், புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இந்தச் சந்திப்பில் பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்டுடன், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரிட்டன் அகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Posts