காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கேட்டு நாம் முன்னெடுக்கும் போராட்டம் எமது காலத்துடன் முடிந்து போகாது எனவும் எமது அடுத்த தலைமுறையும் நிச்சயம் போராடும் எனவும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சர்வதேச பிரதிநிதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா…? இல்லைலயா…? என்பதை அறியாது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தொடர்பான தவிப்பு நிலையானது, உளவியல் ரீதியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பலவீனமான உள்நாட்டு நீதி பொறிமுறைக்குள் எந்த விடயத்திற்கும் உரிய நீதியை எதிர்பார்க்க முடியாத ஒன்று என்றும் அதனால் சுதந்திர சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தமக்கான நீதியை உறுதிசெய்ய முடியுமென தாம் நம்புவதாகவும் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக அனந்தி தெரிவித்தார்.