இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையானது கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாகவே காணப்படுகிறது.
இடைக்கால அறிக்கையில் அதிகார பிரிப்பு என்பது தெளிவாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதே தவிர, மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்கள் என்னவென்பது குறிப்பிடப்படவில்லை. அதுமாத்திரமின்றி உள்ளடக்கத்திலேனும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமின்றி உள்ளது.
இதன்மூலம், சிங்கள தரப்பினர், தமிழர்களின் ஆதரவுடன் அரசியலமைப்பு மாற்றத்தினை மேற்கொண்டு தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப் போகின்றனர் என்பது மாத்திரம் தெளிவாகிறது” என்றார்.