காணாமல் போனவர்கள் விடயத்தில் ஜனாதிபதியின் நிலை என்ன? ஜரோப்பிய பிரதிநிதிகள்

நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தம்மால் அதனை உறுதியாக கூற முடியாது எனவும், அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் பதிலளித்துள்ளனர்.

நேற்று (07) மாலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை சந்தித்த போதே அவா்கள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இருநூறு நாள் தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவது சாதாரண விடயமல்ல.

எனவே இந்த விடயத்தில் அரசுக்கு தொடர் அழுத்தத்தை ஜரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் என ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தை தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும், அரசாங்கத்திற்கு ஜரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் அழுத்தங்களை கொடுத்து வருகிறது. இனியும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தங்களின் உறவுகள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

எப்போது எங்கு வைத்து ஒப்படைக்கப்பட்ட போது காணாமல் ஆக்கப்பட்டார்கள், ரகசிய முகாம்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தனா்.

அத்தோடு இலங்கை அரசாங்கத்திற்கு ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியமை, ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டமை தொடர்பில் தங்களின் கடுமையான ஆட்சேபனையையும் தெரிவித்துக்கொண்டனா்.

Related Posts