வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியில் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியே குறித்த விபத்து நேற்று(திங்கட்கிழமை) சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது அந்த பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்து செல்ல முச்சக்கர வண்டி ஒன்று முற்பட்டுள்ளது. இதன்போது குறித்த முச்சக்கர வண்டியுடன் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து 500மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதையுடைய எஸ்.கிருபா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை முன்னர் இருந்ததுடன், புகையிரத சமிக்ஞை பொருத்தப்பட்ட பின்னர் அது அகற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த கடவைக்கு பாதுகாப்பன கடவையை அமைத்துத் தருமாறு மக்கள் புகையிரத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.