முந்தைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டது: சம்பந்தன்

முந்தைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டது. இந்நிலையில், இந்த அரசாங்கம், கட்சிகளிடையிலான அரசியலை கைவிட்டு மக்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ”குறித்த சந்திப்பின்போது அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளதாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

இந்த அரசாங்கம் சில விடயங்களை முன்னெடுக்கின்ற போதிலும், காணி விடுவிப்பு, காணாமல் போனவர்கள் விடயம், அரசியல் கைதிகள் விடயம் போன்றன தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டே செல்கின்றன.

இதற்கு இரு பிரதான கட்சிகளிடையே நிலவும் அரசியலே காரணம். எனவே, கட்சிகளிடையிலான அரசியலை கைவிட்டு அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை தர வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகவும்” குறிப்பிட்டார்.

Related Posts