வடமாகாண சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி அடையாள உண்ணாவிரதம்!

வட.மாகாண சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தக் கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா, பிராந்திய சுகாதார நிலையம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அமைதி ஊர்வலம் ஒன்றினை நடத்தியதுடன் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனை முன்னால் அமைதியான ஊர்வலத்தை ஆரம்பித்த அவர்கள் மாவட்ட செயலகம் சென்று ஜனாதிபதி, பிரதமாருக்கான மகஜரினை கையளித்தனர்.

மாவட்ட அரச அதிபர் இல்லாத காரணத்தினால் குறித்த மகஜரினை பிரதம கணக்காளர் அ.பாலகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்று வைத்திய அதிகாரி மகேந்திரன் அவர்களிடம் தமது மகஜரை கையளித்ததுடன் தமது போராட்ட தளத்தில் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்த காலத்தில் இருந்து கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. புதிய சுற்றறிக்கைகளை காட்டி எமது நியமனத்தை புறக்கணித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த காலத்தில் ஆற்றிய சேவையை அடிப்படையாகக் கொண்டு எம்மையும் கடந்த காலத்தில் உள்வாங்கியது போன்று உள்வாங்க வேண்டும் என கோரிக்கை விட்டதுடன், நிரந்தர நியமனம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

Related Posts