ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் உத்தரவு!

வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேரூந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து குறித்த பேரூந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் வவுனியா மாவட்ட செயலகத்தில் வட மகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் தலைமையில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வடமகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையை சார்ந்தவர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் கூட்டத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதாலும் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts