உணவை பொதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் ரெஜிபோர்ம் என்பனவற்றை உடன் அமுலுக்கு வரும் வகையில், தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
பொலிஸ்ரயின் மூலப்பொருட்களாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை பொதிசெய்வதற்கான பெட்டி, பிளாஸ்டிக் பீங்காண் கோப்பைகள் மற்றும் கரண்டி என்பனவற்றையும் இறக்குமதி செய்தல் தயாரித்தல் விற்பனை செய்தல் ஆகியவை தடைசெய்ய்பட உள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் பொலித்தீனால் பொதியிடுவதற்கு பதிலாக கடதாசி போன்ற சுற்றாடலுக்கு பொருத்தமான பொதியிடல் மற்றும் பைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மைக்றோன் 20க்கு சமமான அல்லது அதற்கும் குறைந்த மொத்தமான பொலித்தீனை பயன்படுத்துதல் விற்பனை செய்தல் தயாரித்தல் ஆகியவற்றை தடைசெய்து தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அத்தியாவசிய பணிகளுக்காக மைக்றோன் 20க்கும் குறைந்த பொலித்தீன் பாவனையை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிளாஸ்ரிக் பொருட்களை இறக்குமதி செய்யும் போது 15 சதவீத செஸ் வரியை அறவிடுவதற்கும் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.