பொன்னாலை தொடக்கம் திருவடி நிலை வரையான காடு நேற்றைய தினம் தீப்பற்றி எரிந்ததில் பல ஏக்கர் கணக்கான காடு நாசமாகியுள்ளது. நேற்று முற்பகல் 10 மணியளவில் மேற்படி காடு தீப்பற்றி எரிவதைக் கண்ட உத்தியோகத்தர்கள் சிலர் அது தொடர்பாக வலி. மேற்கு பிரதேச செயலாளர் செல்வி பிறேமினி மற்றும் பிரதேசத்திலுள்ள கடற்படையினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
உடனடியாகவே சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் கொடுத்தார். வலி.மேற்கு பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் அங்கு அழைத்த பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் அனைவரையும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தினார். இதன்போது அங்கு வந்த கடற்படையினரும் சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தொழிலாளர்களும் முழு வீச்சில் தீயணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
அதேவேளை அங்கு விரைந்து வந்த யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும் தீ பரந்து எரிந்தமையால் அவர்களால் உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் வலி.மேற்கு பிரதேச சபை, காரை நகர் பிரதேச சபை மற்றும் காரைநகர் பிரதேச செயலகத்தின் உதவியும் கோரப்பட்டது.
காரைநகர் பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் மற்றும் பிரதேச சபைச் செயலாளர் திருமதி உருத்திரசாம்பசிவன் ஆகியோர் உடனடியாகவே பவுஸர்களில் தண்ணீரை அனுப்பிவைத்தனர். அத்துடன் வலி.மேற்கு பிரதேச சபை செயலாளரும் பவுஸர்களில் நீரை அனுப்பியதுடன் பல தொழிலாளர்களையும் அங்கு அனுப்பியிருந்தார்.நூற்றுக்கணக்கானோரின் தீவிர முயற்சியின் பயனாக பிற்பகல் 3.00 மணியள வில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த காட்டு விறகுகளை வெட்டச் சென்றவர்கள் தவறுதலாகவோ அல்லது விசமிகள் வேண்டுமென்றோ காட்டினுள் தீமூட்டி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
