இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று நண்பகல் 12.30க்கு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
சிறிதரன் மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கை பாராளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு மற்றும் முறைப்பாட்டு குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன். இந்தநிலையில் ஐரோப்பிய பாராளுமன்றில் உள்ள குழுக்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன? நடைமுறைகள் என்ன? என்பனவற்றை அறிந்து கொள்வதற்கான செயலமர்வுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன்.
இதன்போது வெளியே புகைப்படம் எடுத்துக் கொண்டபோது அதில் நிர்பந்தத்தின் பெயரிலேயே புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
ஆனால் இங்கே சமூக வலைத்தளங்கள், இணைய தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இவை எங்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமேயாகும். நான் இலங்கை அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி வரி சலுகையை பெற்று கொடுப்பதற்காகவே பெல்ஜியம் சென்றேன் எனவும், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக செயற்பட்டேன் எனவும் எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
நான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி நடப்பவன் அல்ல. அவ்வாறான சமூகத்தில் நான் பிறக்கவும் இல்லை என கூறினார்.