நாங்கள் மைத்திரி,ரணிலின் ஆட்சியை நம்புகின்றோம் : சம்பந்தன்

இலங்கையில் தற்போது ஆட்சி செய்துவரும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவி தேவையென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

இலங்கைக்க பயணம் மேற்கொண்ட நரேந்திரமோடியை கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோதே தான் இவ்வாறு கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக நான் அவருக்கு எடுத்துக்கூறினேன்.

தற்போதைய கூட்டாட்சி தொடர இந்தியா உதவும். அரசாங்கத்தில் ஒற்றுமையில்லாது போனால் ஒரு நாடு முன்னேற முடியாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

தடைகள் பல இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவும் முன்னோக்கி நகர்வார்கள் என நம்புகின்றோம்.

அவர்கள் நாட்டைப் பிரிக்காது அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Related Posts