புத்தள விபத்தில் முல்லை. மாவட்ட செயலக சாரதி பலி

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராம்பியடி பிரதேசத்தில் நேற்ற(05) அதிகாலை 3 மணியளவில் இடம்பெறற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கீழ் இயங்கும் தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்கள சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து கொழும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் தொகைமதிப்பு புள்ளி விவரத் திணைக்களத்துக்குச் சொந்தமான கெப் ரக வாகனம், புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்த்திசையில் வந்த லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நேற்று நடைபெற இருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விவரத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளரும், அவருடைய இரண்டு பிள்ளைகளும் சாரதியும் பயணம் செய்துள்ளனர்.

இதன்போது குறித்த கெப் ரக வாகனம் புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதிக்கு திடீரென தூக்கம் ஏற்பட்டமையினால், எதிர்த் திசையில் வந்த லொறியொன்றுடன் குறித்த கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக, புத்தளம் தலைமைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தெரிவித்தார்.

இவ்விபத்தின் போது, வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பணிப்பாளரும், அவரது இரண்டு பிள்ளைகளும் காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பணிப்பாளர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் அவரது இரண்டு பிள்ளைகளும் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையிலேயே சிசிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் சடலம், புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துத தொடர்பில் ,புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts