மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இரு இளைஞர்கள் உட்பட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சுழிபுரம் பனிப்புலம், பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் யஸ்ரின் (வயது 17) மற்றும் திருநாவுக்கரசு கரன்(வயது 17) ஆகிய இருவரும் எதிரே வந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோத்தர்கள் உட்பட மதுபோதையில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த4பேரையும் பொலிஸார் சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றிய வேளையிலேயே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த இரு இளைஞர்களும் பிறந்ததின கொண்டாட்டம் ஒன்றினை முடித்துக்கொண்டு மதுபோதையில் அதிக வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
பண்டத்தரிப்பு வடலியடைப்பு பகுதியில் முந்திச் செல்ல தடை செய்யப்பட்ட வீதிக் குறியீட்டினை பொருட்படுத்தாது போக்குவரத்து விதிக்கு முரணாக முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து இளவாளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
