தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனம்
2017.05.01
(ஆலையடி வேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானம்)
- ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் 30/01, 34/01 ஆகியவற்றில் இலங்கையும் பெறுப்பேற்றுக் கொண்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாகத் துரித கதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.
- புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறையில், எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிப்புறாத வகையிலும், போர்ச்சூழல் காரணமாகக் குறைந்துள்ள தமிழ் மக்களது மக்கட் தொகை அவர்தம் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காது அதனை ஈடு செய்யும் வகையிலும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்மந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இச்சட்டம் நீக்கப்பட்டு மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டம் சர்வதேச நியமங்களை முற்றாக அனுசரிப்பதாக அமைய வேண்டும்.
- கடந்த மூன்று தசாப்தங்களில் அரச அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் சம்மந்தமான விசாரணைகள் உடனடியாக நடாத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
- ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் சுயாதீனமாகவும், பயமின்றியும் செய்யக் கூடிய உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
- பாதுகாப்புத் தரப்பினரால் வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களின் நிலங்கள் வாக்குறுதி அளிக்கப்பட்ட படி கால தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். இக்காணிகளில் உரியவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வீடற்றோருக்கு கல் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன், அவர்கள் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கான வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
- தமிழ், முஸ்லீம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிறுவும் செயற்திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.
- வனப் பிராந்தியமாகவும், வனவிலங்குக் காப்பகம் மற்றும் தொல்பொருட் பிரதேசங்களாகவும் பிரகடனப்படுத்தப் படுவதன் மூலம் தமிழ், முஸ்லீம் மக்களின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் நிறுத்தப்பட்டு அவ்விடங்கள் உரிய மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
- வடக்குக் கிழக்கில் தொழில் வாய்ப்பற்றுள்ள தமிழ்ப் பட்டதாரிகளுக்கும் ஏனைய இளைஞர் மற்றும் மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் தொழில் வாய்ப்புக்கேற்ற வகையில் கல்விக் கொள்கை சீரமைப்புச் செய்யப்பட வேண்டும்.
- முதலீடுகள் மற்றும் தொழிற்துறைகள் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் போர் காரணமாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ள இவ்விரு மாகாணங்களும் விசேட ஏற்பாடுகள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
- முன்னாள் போராளிகள் சமூகத்தில் மீளிணைக்கப்படும் செயற்பாடு சீரான முறையில் நடைபெற வேண்டும். அவர்கட்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு சனநாயக, அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
- விலைவாசிக்கேற்ற சம்பள உயர்வோடு கூட்டுறவாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் என்போரின் சம்பள வேறுபாடுகள் சீர் செய்யப்பட வேண்டும்.
- விவசாயம், மின்பிடி, கால்நடை வளர்ப்போர், சிறு கைத்தொழிலாளர்கள் ஆகியோருடைய வருவாய்கள் தடைப்படாமலும், குறைவுபடாமலும் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.