Ad Widget

‘காணாமல் போன பிள்ளைகள் ராணுவத்தின் பிடியிலேயே உள்ளனர்’ : பெற்றோர்

“எமது பிள்ளைகள் ராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளனர். இதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுகின்ற நிலையிலும் அவர்கள் ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?” என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) 59ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தந்தையொருவரே மேற்குறித்தவாறு வினவியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ ராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் கூடிய விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையேல் அதற்கு முன்னர் அவர்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ஆணைக்குழு, பொலிஸ் நிலையம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், நல்லிணக்க ஆணைக்குழு என அனைத்து இடங்களிலும் முறைப்பாடு செய்தும் எனது பிள்ளை குறித்த எவ்வித தகவலும் எனக்கு கிடைக்கவில்லை” என்றார்.

Related Posts