போர்க்குற்றம் இடம்பெறவில்லையென அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தான் அவ்வாறு குறிப்பிடவில்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் கருத்து தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்து உரையாற்றிய போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் ராஜித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”யாழில் நான் தெரிவித்த விடயங்களை ஊடகங்கள் தவறாக பிரசுரித்துள்ளதோடு, இவரும் (சிவசக்தி ஆனந்தன்) தவறாக விளங்கி வைத்துள்ளார். நான் உரையாற்றும்போது மாவை சேனாதிராஜா எம்.பி.யும் அங்கிருந்தார்.
எனது நிலைப்பாடு என்னவென்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே நான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றேன். எனவே தவறாக விளங்கிக்கொண்டு, தவறான அர்த்தப்படுத்தல்களை ஏற்படுத்த வேண்டாம்” என்றார்.