வடக்கு மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்: மங்கள

யுத்தத்தினால் துன்பப்பட்ட வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கவே இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் ‘உண்மையில் சர்வதேச நீதிபதிகளை அழைக்க காரணம் என்ன? எமது நீதிமன்ற செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லாமையே இதற்கு காரணமாகும். இந்த கோரிக்கை எழுவதற்கு பிரதான காரணம் மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சியே.

அவர் தனது ஆட்சியில், யுத்த வெற்றி என்ற நாமத்தைப் பயண்படுத்திக் கொண்டு, ஏகாதிபத்திய ஆட்சியை அமைக்க முயற்சித்தார்.

தனது ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்காக நீதிமன்றத்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, புதிய அரசியல் திருத்தத்தினை ஏற்படுத்தினார்.பிரதம நீதியரசரை ஒரே இரவில் வெளியேற்றி, தனக்கு சார்பான ஒருவரை நியமித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

இவ்வாறான செயற்பாடுகளினால்தான், சர்வதேச நீதிபதிகள் என்ற கோரிக்கை வலுவடைந்தது. ஆனால் நாம் அந்த நிலைமையினை மாற்றியுள்ளோம். நீதிமன்றத்தின் சுயாதீனத்திதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற கோரிக்கை வராது என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் சர்வதேச நீதிபதிகள் வருவார்களா? இல்லையா? என்பது விடயமல்ல. இதனை எமது நாட்டு பிரச்சினையாக நோக்கவேண்டும்.

வேறு நாட்டிலுள்ள மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நாம் முயலவில்லை. எமது நாட்டில் துன்பப்பட்ட சகோதர மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே முயற்சிக்கின்றோம்.

அன்று தெற்கில் இளைஞர்கள் கொல்லப்பட்ட போதும் நாம் குரல் கொடுத்தோம். ஆச்சரியம் என்ன என்றால் அன்று தெற்கு மக்கள் குறித்து பேசிய மஹிந்த இன்று வாய்மூடியிருக்கிறார். அதேபோன்றுதான் வடக்கு மக்களுக்கும் நாம் நியாயத்தைப் பெற்றக்கொடுக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

Related Posts