காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம்!

காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே காணாமல் போனவர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம்.

எப்படியிருப்பினும், காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விடயத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும், இதற்கு தமிழ் மக்கள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனவர்களை கண்டறிவது அவ்வளவு இலகுவாக காரியமல்லவெனவும், அதற்கென கடினமாக உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல்போனோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்ததையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து காணாமல் போனோர் உறவுகளின் மத்தியில்கோபத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts