யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கும் நோர்வேயின் பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகத்துக்கும் (எச்.எல்.வி) இடையிலான இணை ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே துணைத் தூதுவர் குநூட் நைவூல்ட் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசட்ணம், நோர்வே எச்.எல்.வி. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிறிஸ்டின் செல்விக் ஆகியோர் இரண்டு பல்கலைக்கழகங்களின் சார்பிலும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் உத்தேச மதிப்பீடு இலங்கை ரூபாவில் சுமார் எட்டு மில்லியன் ஆகும்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடம், தொழில் நுட்ப பீடம், பொறியியல் பீடங்களின் ஆளணியினரும், மாணவர்களும் எச்.எல்.வி பல்கலைக்கழகத்துடன் கற்றல் நடவடிக்கைகளுக்காக பரஸ்பர பரிமாற்றங்களில் ஈடுபடுவதோடு, இணை ஆய்வு நடவடிக்கைகளும் இடம் பெறும் எனவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் பு.ரவிராஜனும், எச்.எல்.வி. பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் வி.தயாளனும் செயற்றிட்ட இணைப்பாளர்களாகச் செயற்படவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
