என்னை அசிங்கப்படுத்தி, என்மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாலேயே தான் கேப்பாப்புலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தாம் கடந்த மாதம் 31ஆம் நாளிலிருந்து தமது காணியை மீட்க இரவு, பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோ, சுமந்திரனோ கருத்திலெடுக்கவில்லையென அம்மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில் கேப்பாப்புலவு மக்களைச் சென்று சந்திக்காமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தன்னை அசிங்கப்படுத்தி தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டிருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் அதனையடுத்தே தான் அம்மக்களைச் சென்று சந்திக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
மேலும், இப்போராட்டத்திற்கு பின்புலத்தில் தனது அரசியலுக்கெதிரானவர்களே இருந்து செயற்படுவதாகவும், அவர்களே தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
அத்துடன், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு செல்லாமைக்கும் இதுவே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.