எதிர்வரும் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திரமுனை வரையான சமாதான பாதை சைக்கிள் ஒட்டமும், வாகனபேரணியும் தென் இலங்கை சார்ந்த ஆர்.பீரிஸ் என்பவரினால் நேற்றுக் காலை 07.30 மணியளவில் பருத்தித்துறை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ், சிங்கள, முஸ்ஸிம், கிறிஸ்தவ மக்களிடையே நல்லிணக்கம், சகோதரத்துவம், புரிந்துணர்வு போன்ற மூன்று முக்கிய விடையங்களை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இந்த சைக்கிள் ஓட்டம் இடம்பெறுவதாக ஆர்.பீரிஸ் தெரிவித்தார்.
325 கிலோமீற்றர்களை கொண்ட குறித்த பயணமானது பருத்தித்துறையில் இருந்து நெல்லியடி, வல்லை, அச்சுவேலி, கல்வியங்காடு யாழ் மத்திய பகுதி கைதடி, நாவற்குழி, கொடிகாமம், பளை,முகமாலை, இயக்கச்சி, கிளிநொச்சி, மற்றும் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, காத்தான் குடி, வெல்லவாய, கதிர்காமம், மற்றும் காலி ஊடாக தலைநகரை சென்றடையவுள்ளது.
