கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள உறவுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின், அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலக்கிக்கொள்ள நேரிடும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்த கோப் குழு அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு, காணாமல் போனோருக்கு என்ன நடந்ததென தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியுமென குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், ஆகக்குறைந்தது காணாமல்போன உறவுகள் உயிருடன் இருந்தால் இருக்கின்றனர் என்றும் இல்லையென்றால் கடந்த அரசால் கொலைசெய்யப்பட்டு விட்டனர் என்றாவது கூறமுடியுமல்லவா என வினா எழுப்பினார்.
கடந்த 8 வருடங்களாக தமது உறவுகளை தேடி அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு புதிய கதைகளை கூறி ஏமாற்றிக்கொண்டு இனியும் காலம் கடத்திக்கொண்டிருக்காமல், அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் பதியப்பட்ட முறைப்பாடுகள் வெறும் ஆவணங்களாகவே இருக்கின்றன என சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், அரசின் நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சகித்துக் கொண்டிருக்கின்றார் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைத்தையும் சகித்துக்கொண்டே இருக்கும் என தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஆட்சியாளர்கள் நினைக்கக்கூடாதென மேலும் தெரிவித்தார். இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்துவரும் மக்களுக்கு காலம் தாழ்த்தாது உரிய தீர்வை வழங்கவேண்டுமென சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டார்.