காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் அறிவிக்காத நிலையில், அண்மையில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கியதைப் போன்று காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
”இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் காணாமல் போனோர் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தப்பட்டதே தவிர, அதனூடாக தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சாத்வீக ரீதியிலான போராட்டங்களின் ஊடாக தமது உரிமையை கோருகின்ற போது வாக்குறுதியை அளிக்கும் பெரும்பான்மை அரசியல் சக்திகள், அவர்களின் உணர்வுகளை உணர்ந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகம் ஒன்றினை அமைப்பதிலேயே காலத்தினை கடத்தும் அரசு, தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கின்றதா என்கின்ற கேள்வியையே எழுப்புகின்றது.
இந் நிலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்பதுடன் ஜல்லிக்கட்டுக்கு உணர்வுபூர்வமாக இளைஞர்கள் ஆதரவு வழங்கி போராட்டங்களை நடத்தியிருந்ததைப் போன்று, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இப் போராட்டத்திற்கும் இளைஞர்கள் அணிதிரண்டு தமது ஆதரவினை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.