தேசிய அரசுக்கு த.தே.கூட்டமைப்பு காலக்கேடு

2017ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரையில் தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்போகும் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடிவும் அமையும் எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல்ஹுசைன் இலங்கை அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுத்துள்ளது என்பது தொடர்பான அறிக்கையை மார்ச் மாதம் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.

குறிப்பாக கடந்தவருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியது உட்பட இலங்கை விஜயத்தின் போது தான் நேரில் அவதானித்த மற்றும் ஆராய்ந்த விடயங்களின் அடிப்படையில் ஐ.நா ஆணையாளர் செய்ட் அல்ஹுசைன் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆணைபெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் முற்போக்கான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. அதேநேரம் தமிழ்த் மக்களின் உடனடிப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தேசிய அரசாங்கமும் திருப்திகரமானதாக செயற்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளது.

மறுபக்கத்தில் தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள், இனங்களுக்கிடையிலான சகவாழ்வை ஏற்படுத்துலக்கான திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றது.

ஆகவே தேசிய அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலிலிருந்து தப்பித்துவிடுமா? மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தேசிய அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்தும் நழுவிக்கொள்ளுமா? புதிய அரசியலமைப்பு பணி என்ற ஒரு விடயத்தால் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுவிடுமா? என எழுந்துள்ள சந்தேகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தகவல் தருகையில்,

அரசாங்கம் சரியான வேகத்திலே செயற்படவில்லை என்பதை பல தருணங்களில் சுட்டிக்காட்டிக்கொண்டு வருகின்றோம். இலகுவாக செய்யக்கூடிய பல விடயங்களை அவர்கள் செய்து முடிக்கவில்லை என்பது எமது நிலைப்பாடு.

கடந்த ஜுன் மாதம் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரை நேரடியாக சந்தித்து பேசிய போது இவ்விடயம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதன்போதும் நான் அரசாங்கத்தின் காலதாமதங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்திருந்தேன். அதுமட்டுமன்றி இந்த விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுரணை அளித்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. தமது பொறுப்புக்கூறலை செய்து முடிப்பதற்கு காலஅவகாசம் போதமல் போய்விட்டது. ஆகவே எமக்கு மேலும் காலஅவகாசம் தாருங்கள் என ஐ.நா.மனித உரிமை சiபில் விண்ணப்பிக்க வேண்டிய தேவை தற்போது அராசங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றமையை நாம் உணர்கின்றோம்.

அரசியலமைப்பு உருவாக்க பணிகள் சரியாக நடக்குமாக இருந்தால் குறிப்பாக தொடர்ந்தும் தாமதமின்றி வரைவுகள் வெளியாகி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற வரையிலான செயற்பாடுகள் பெப்ரவரி மாதமளவிலே வருமாகவிருந்தால் அவ்வாறான விண்ணப்பத்தை ஐ.நா சபையில் அரசாங்கம் செய்யும் பட்சத்தில் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

அரசியலமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்ற அதேவேளையிலேயே மற்றைய சில விடயங்களை முன்னெடுப்பது அரசாங்கத்திற்கு அசௌகரியமாகவிருக்கும் என்பதோடு மட்டுமல்ல முடியாமலும் இருக்கும் என்பதில் சில நியாயங்கள் இருக்கலாம்.

ஆனால் கைதிகள் விடுதலை, நிலங்கள் விடுவிப்பு, வடக்கில் இராணுவத்தை குறைத்தால், மீள்குடியேற்றப் பணிகளை நிறைவுக்கு கொண்டு வருதல், கண்ணி வெடிகள் அகற்றுதல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு முறையான வாழ்வாதாரத்தினை வழங்குதல் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குதல் போன்ற உடனடியாகச் செய்யக்கூடிய விடயங்களை அரசாங்கம் காலம் தாழ்த்திக்கொண்டிருக்காது மேற்கொள்ள முடியும்.

ஆகவே இன்றிலிருந்து பெப்ரவரி நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியினுள் அரசாங்கம் ஆகக்குறைந்தது இந்த விடயங்களிலாவது முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்துடன் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலே தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டு வரைவுகள் வெளியாகவேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மாத்திரமே அரசாங்கத்திற்கு காலஅவகாசம் கொடுப்பற்கு இணங்குவோம். அது நியாயமானதாகவும் இருக்கும்.

அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத பட்சத்தில் நாங்கள் வித்தியாசமாக செயற்படவேண்டிய சூழ்நிலை இயல்பாகவே ஏற்படும். அதற்காக நாங்கள் பின்னிற்கவும் போவதில்லை. பொறப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலகி நிற்கமுடியாது. அதற்கும் நாமும் இடமளிக்கப்போவதில்லை.

சில விடயங்கள் அரசாங்கதினால் மட்டுமே செய்யமுடியும். அதற்காக நாம் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் பலவகைகளில் அழுத்தங்களை வழங்கியவாறே இருப்போம். அவ்வாறான விடயங்களுக்கு வெளிநாட்டுச் சக்திகள் உந்துசக்திகளாகவே இருக்கமுடியும். அந்த யாதார்த்தத்தை உணர்ந்தவர்களாக உந்து சக்திகளை உந்து சக்திகளாக பயன்படுத்துகின்ற யுக்தியையும் நாம் கையாள்வோம் என்றார்.

Related Posts