ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு சர்வதேச விசாரணையின் தேவையை எடுத்துக்காட்டியுள்ளது

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரவிராஜின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படைப் புலனாய்வு அதிகாரகிள் மூவர் உட்பட அனைவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையில்லை என அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை, இலக்கிய விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே சுமந்திரன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை இடம்பெற்று பத்து வருடங்களுக்குப் பின்னர் நேற்றைய தினம் அதிகாலை தீரப்பு வெளியாகியிருந்தது.

இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நெவி சம்பத் உள்ளிட்ட மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகளையும் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் ஏனைய இருவரையும் ரவிராஜ் படுகொலை தொடர்பலான வழக்கை விசாரித்த விசேட ஜுரிகள் சபை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நேற்றைய தினம் விடுதலை செய்திருந்தது.

கடந்த ஒரு மாதமாக இந்த வழக்கை ஜுரிகள் சபை விசாரித்திருந்ததுடன், நேற்று முன்தினம் முதல் இடம்பெற்ற நீண்டநேர இறுதிநாள் வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து ஜுரிகள் சபை நேற்று அதிகாலை 12.16 அளவில் இறுதித் தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்த வழக்கில் சாமி என அழைக்கப்படும் பழனிசாமி சுரேஸ், நேவி சம்பத் எனப்படும் பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, வஜிர என அழைக்கப்படும் பிரதீப் சந்திம, சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன், ஃபபியன் ரோய்ஸ்டன் ஆகியோருக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதி உயிரிழந்த நிலையில் ஏனைய ஐவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் குற்றவியல் தண்டனை கோவை ஆகிய சரத்துக்களின் கீழ் எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள வீட்டிற்கு அருகில் வைத்து நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் லொக்குவெல்ல முருகே லக்ஷ்மன் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

ரவிராஜின் படுகொலை சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எம்.ஏ.சுமந்திரன் இந்த தீர்ப்பு தமது கட்சிக்கு அதிருப்தி அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts