சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட வானுார்தி மூலம் அனுப்பி வைப்பு

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர்.

களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேனும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது 11 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ்.கணபதிபிள்ளை நேரில் சென்று மரண விசாரனைகளை மேற்கொண்டிருந்தார்.

சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் மேற்கொண்டிருந்தார்.



இதன்படி உடலிலும் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியிலும் ஏற்பட்ட பலமான காயம் காரணமாக மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து குறித்த பதினொரு சடலங்களில் மாத்தளை பகுதியை சேர்ந்தவரது சடலமானது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதுடன் ஏனைய பத்து பேரது சடலங்களும் இலங்கை விமான படையினரது ஒத்துழைப்புடன் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு களுத்துறை மாத்தம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று அதிகாலை முதல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகள் போன்ற அவர்களது அனைத்து ஏற்பாடுகளையும் யாழ்.போதனா வைத்தியசாலையினர் ஏற்பாடு செய்திருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts