காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் மற்றும் திருகோணமலை எண்ணெக்குதம் போன்ற அரசாங்கச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அக்கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவிக்கையில்,
விலைமனுக்கோரலின்றி எந்தவிதக் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறாது எனக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இருந்தபோதிலும் எந்தவித விலைமனுக்கோரலுமின்றி இந்த அரசாங்கம் பல அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம், சம்பூர் அனல்மின் நிலையம் போன்றவற்றை இந்தியாவுக்கும், திருகோணமலை எண்ணெக்குதத்தினை அமெரிக்காவுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கம் இவ்வாறாக சகல பொருளாதார கேந்திர நிலையங்களையும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாயின் 2020 ஆம் ஆண்டில் காவல்துறைத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், நீதிமன்றம் போன்றனவே அரசாங்கத்தின் சொத்துக்களாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.