நெப்போலியன் என்னை வெட்டினார்: சிவாஜிலிங்கம் சாட்சியம்

கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கென ஊர்காவற்துறை நோக்கிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடத்தினர் என நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளனர்.

குறித்த தாக்குதலின்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஜீவன் என்பவர் தம்மை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதாக மாவை சேனாதிராஜா சாட்சியமளித்ததோடு, நெப்போலியன் தன்னை வெட்டியதாக சிவாஜிலிங்கம் சாட்சியமளித்துள்ளார்.

அதன் பின்னர் நெப்போலியனின் கட்டளைக்கு அமைவாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் இருவர் உயிரிழந்ததோடு, 20 பேர் காயமடைந்ததாகவும் இருவரும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த ஒருவரையும் தன்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் ரவிராஜே தமது வாகனத்தில் ஏற்றி யாழ். போதனா வைத்தியாலைக்கு கொண்டுசென்று அனுமதித்ததாக மாவை தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Posts