முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் திணைக்கள வளாகத்தில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்கரை வீதியிலுள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்சம் ரூபா பெறுமதியிலான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த நிலையில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறையிட்டதினை தொடர்ந்து விசேட குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், நாயாறு போன்ற பிரதேசங்களில் களப்புக்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களோடு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் முல்லை மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.