தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வன்வலுவை விட மென்வலு அரசியல் நடவடிக்கைகளின் மூலமே பல வெற்றிகளை ஈட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னை மென்வலு அரசியல்வாதி என்று அழைப்பதை பெருமையாகக் கருதுவதாகவும் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டிற்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்தபோது, பலர் எள்ளி நகையாடியதாகவும் இன்றைக்கும் நகைப்பதாகவும் குறிப்பிட்ட சுமந்திரன், ஆனால் இன்று அந்தக் கூற்று நிறைவேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் உண்மையில் எதனைக் கேட்கின்றார்கள். நியாயத்தைக் கேட்கின்றார்கள். அவர்களுக்குரியதைத் தான் கேட்கின்றார்கள். எங்களிடத்தில் இருக்கின்றதை பறிப்பதற்கு முனையவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுவது சிங்கள அரசியல் தலைவர்கள் பலருக்கு பரீட்சியமான அரசியல் போக்காகக் காணப்பட்டது.
ஆகையினால் தான் அவர்களிடம் சென்று நாங்கள் கேட்பது உங்களுடைய உரிமையை அல்ல. உங்களுக்குச் சமமான எங்களுடைய உரிமை என்று சொல்லுவது அவர்களுக்கு அச்சமான விடயம். அப்படிச் சொல்லுகின்ற போது நியாயமாகச் சிந்திக்கின்ற சிங்கள மக்கள், அவர்கள் சொல்லுவது சரிதான் எங்களிடத்தில் அவர்கள் எதுவும் பறிக்கவில்லை. நாங்கள் ஒரு மக்களாக எந்த உரித்தை வைத்திருக்கின்றோமோ அதே சம உரித்தை அவர்களும் இந்த நாட்டில் வைத்திருப்பதற்கு தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். அதிலே என்ன தவறு என்று நினைக்கத் தோன்றுவார்கள்.
இவ்வாறு நினைக்கின்ற போதுதான் இன சமத்துவம் உருவாக்கும். எண்ணிக்கை அல்ல பெரிது. ஜனநாயகம் என்பது தலைகளை எண்ணுவது இல்லை. எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனால் தமிழ் மக்களை அடக்குவது தவறு. அவர்களும் மக்களாக தங்களுடைய தனித்துவத்தை அவர்களுடைய பிரதேசங்களிலே நிலைநிறுத்தி ஆளக்கூடிய விதத்தில் வாழுவதிலே என்ன தவறு என நியாயமாக சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.
அது ரவிராஜ் ஆரம்பித்த ஒரு பயணம். பேச்சினால் நியாயத்தை எடுத்தியம்புவதால் கூடி பழகுவதனால் சிங்கள மக்களையும் எங்களுடைய வழிக்குத் திருப்பலாம் என்ற மிகவும் ஆழமான நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது தான் காரணம். ரவிராஜினுடைய கொள்கை பேசிப் பழகி மக்களிடையே வெல்லுகின்ற கொள்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.