ஆவாகுழு என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழு!

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தோற்றம் பெற்ற ஆவாகுழு என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழுவே என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

இவர்கள் ஆவா குழு என்ற பெயரில் மாத்திரமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் இரும்புக்குழு என்ற பெயரிலும் கொள்ளையில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் சாடியுள்ளார்.

ஆவா குழு சந்தேக நபர்கள் என்ற போர்வையில் வடக்கில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுகின்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆவா குழு என்ற விடயத்தில் நாங்கள் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில் இதில் இருப்பவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒட்டுக்குழுக்கள் தான்.

இதனை ஆதாரமாக சொல்லலாம். ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்வதுடன் இவர்கள் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு வாள்வெட்டில் ஈடுபடுவர்கள் தப்பிச் செல்லும் போது பல தடைமுகாம்களைத் தாண்டியே செல்ல வேண்டும்.

இவர்கள் செல்லும்போது தாம் வைத்திருக்கும் அடையாள அட்டைகளைக் காட்டியே தப்பிச் செல்கின்றனர். இதுதான் முன்னரும் நடைபெற்றது. தற்போதும் நடைபெறுகின்றது.

ஆனால் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து அவர்களைப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பதானது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது அவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. பின்னர் இவர்கள் விசாரணை என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டு ஆவா குழு உறுப்பினர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை நாங்கள் விடுதலை செய்வோம் என்று தெரிவித்து பலவந்தமாக கையெழுத்து பெறுகின்றனர்.

இதுவரை தமிழ் மக்களைத் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து எவ்வாறு பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கின்றார்களோ அதேபோன்று அவர்கள் இந்த அப்பாவி இளைஞர்களைச் சிக்க வைக்கின்றனர்.

பின்னர் இதனை ஒரு தமிழ் மக்கள் சார்ந்த, விடுதலைப் புலிகள் சார்ந்த விடயமாக சித்திரிக்க முயல்கின்றனர். நிச்சயமாக இது அவ்வாறானதொரு விடயமல்ல.

பயங்கரவாத தடைச்சட்டத்தை விடுத்து சாதாரண சட்டத்தின் கீழ் இந்த ஆவா குழு சந்தேகநபர்களைக் கொண்டு சென்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் வைத்து விசாரிப்பார்களேயானால் அந்த விடயங்களில் உண்மை இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

Related Posts