வவுனியா உட்பட வட மாகாணத்தின் பல்வேறு இடங்களில் ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தி கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வர் அடங்கிய கும்பலை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுடன் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசாரணையின்போது குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
வவுனியாவின் நெடுங்கேணி, வீரபுரம், யாழ்ப்பாணம் – இளவாலை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்தே கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 கத்திகள், 28 பவுண் தங்க நகைகள், முகத்தை மூடி மறைத்துக் கட்டும் கறுப்பு துணிகள், முச்சக்கர வண்டி ஒன்று, மோட்டர் சைக்கிள் ஒன்று என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் மாங்குளம், சிலாபத்துறை, ஒட்டிசுட்டான், அடம்பன், மன்னார், கனகராயன்குளம், புளியங்குளம், செட்டிகுளம், வவுனியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கும்பல் செயற்பட்டு வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த கைது தொடர்பில் சந்தேகநபர்களின் உறவினர்கள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் மற்றும் அவருடைய பெறாமகன் ஆகியோரிடம் இருந்து 7 இலட்சம் பெறுமதியான பொருட்களை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். குருநகர் பகுதியில் வைத்து குறித்த பெண் மற்றும் அவருடைய பெறாமகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 கையடக்க தொலைபேசிகள் 1 லப்டப் 2 மோட்டார் சைக்கிள்கள், மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் நகைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.