Ad Widget

சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டவர் ஐ.நா.வில்

இலங்கையின் மிக மோசமான சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர் எனக் குறிப்பிடப்படும் குற்றப்புலனாய்வுப் பிரவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ், ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. அமர்வில் கலந்துகொண்டுள்ளமை பாரிய எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்ததோடு, கொழும்பிலுள்ள நான்காம் மாடி சித்திரவதைகளுக்கும் அவரே பொறுப்பாக இருந்ததாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான ஒருவரை ஐ.நாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளமையானது பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச அமைப்புகளையும் அவமதிப்பதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி கடந்த கால குற்றச்சம்பவங்களுக்கான தண்டனைகளிலிருந்து சிசிரவுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த 17 மாதங்களாக அவர் இலங்கையின் தேசிய புலனாய்வு நிலையத்தில் பணியாற்றியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள யஸ்மின் சூக்கா, இக்காலப்பகுதியில் சித்திரவதைகளையோ பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளையோ தடுத்து நிறுத்த எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Posts